UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 09:19 AM
புதுடில்லி:
டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று, கிரோரி மால் கல்லுாரி வளாகத்தில், மாணவர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் நாளை ஓட்டுப் பதிவும், நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. என்.எஸ்.யு.ஐ., எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம், ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உட்பட பல சங்கங்கள் போட்டியிடுகின்றன.
ஓட்டுப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று களைகட்டியது. கிரோரி மால் கல்லுாரி வளாகத்தில், இந்திய தேசிய மாணவர் சங்க வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க, உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் நேற்று வந்தார்.
ஆனால், அதற்கு சில மணி நேரத்துக்கு முன், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சங்கத்தைச் சேர்ந்த சிலர், இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்றதாகவும், இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பூர்வாஞ்சல் மாணவரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இரு சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும், கல்லூரி வளாகத்தில் மோதிக் கொண்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்லுாரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இந்திய தேசிய மாணவர் சங்கம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பூர்வாஞ்சல் மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி., கொண்டுள்ள ஆழமான வெறுப்பை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது.
'ஏ.பி.வி.பி.,யின் வன்முறைக்கு மாணவர்கள் தங்கள் ஓட்டு மூலம் பதில் அளிப்பர்' என கூறியுள்ளது.
அஜய் ராய் கூறுகையில், “டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில், இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெறும் என்ற நிலையை அறிந்த ஏ.பி.வி.பி., கிரோரி மால் கல்லுாரி வளாகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளது. இது, அவர்களுடையை தோல்வி பயத்தைக் காட்டுகிறது,” என்றார்.