36 படிப்புகளுக்கு மீண்டும் நுழைவு தேர்வு; 'கியூட்'டில் 'சீட்'டுகள் நிரம்பாததால் முடிவு
36 படிப்புகளுக்கு மீண்டும் நுழைவு தேர்வு; 'கியூட்'டில் 'சீட்'டுகள் நிரம்பாததால் முடிவு
UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 08:44 AM

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகம் மூன்று இளநிலை படிப்புகள், 33 முதுநிலை படிப்புகளுக்குதனியாக நுழைவு தேர்வு நடத்தி சீட்டுகளை நிரப்ப முடிவு செய்து, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக முதலாமாண்டில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு பல்கலை., தனியாக நுழைவு தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி வந்தது.
மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்ட பிறகு அனைத்தும் தலைகீழானது. கடந்த 2022ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு மத்திய தேர்வு முகமையின் கியூட் தேர்வு அடிப்படையில் சேர்க்கையை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டும் கியூட் -நுழைவு தேர்வு அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வந்தன.
மாணவர்களுக்கு பல சுற்று கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில் இப்போது புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மூன்று இளநிலை மற்றும் 33 முதுநிலை படிப்புகளுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம் என தெரிவித்துள்ளது.
விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி., மாணவர்கள் 300 ரூபாய், இதர பிரிவினருக்கு 600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவு தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, போர்ட் பிளேயர் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடக்கும் என்றும், விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் ஏதேனும் இரண்டு தேர்வு மையங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்தா, முழுமையாக சீட்டுகள் நிரம்பவில்லை. இன்னும் 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. கியூட் மதிப்பெண் அடிப்படையில் நிரம்பாத இடங்கள் கடந்த காலங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தி இடங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், பல மாநிலங்களில் இருந்து விண்ணப்பித்த மாணவர்கள் பல்வேறு பாடத்திட்டங்கள் படித்திருக்க சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாவே மீண்டும் ஒரு நுழைவு நடத்தி நிரம்பாத இடங்களை நிரம்ப புதுச்சேரி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.