மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு; பள்ளிகளில் ஆய்வு செய்ய முடிவு
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு; பள்ளிகளில் ஆய்வு செய்ய முடிவு
UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 09:36 AM
கோவை:
கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்ததன் அடிப்படையில், மண்டலத்துக்கு ஐந்து பள்ளிகள் வீதம், 25 பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை பருவ மழைக்கு முன் விரைந்து ஏற்படுத்த வேண்டும்.
கோவை மாநகராட்சி சார்பில் 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 17 மேல்நிலைப்பள்ளிகள் என, 148 பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
மாநகராட்சி அலுவலகங்களில் மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல், மண்டலத்துக்கு ஐந்து பள்ளிகள் வீதம், 25 பள்ளி வளாகங்களில் தேங்கும் மழைநீரை சேமிக்க ரூ.50 லட்சத்தில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்தரை மாதங்களாகி விட்டது; இன்னும் அமைக்கப்படவில்லை. சில பள்ளிகளில், 10 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது செயல்பாட்டில் இல்லை. வடகிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தேவையான பள்ளிகளில் புதிதாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிகளில் தற்போதுள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து, பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.