UPDATED : ஜன 03, 2026 11:24 AM
ADDED : ஜன 03, 2026 11:28 AM

பெங்களூரு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பி.காம்., ஐந்தாவது செமஸ்டருக்கான தேர்வின் வினாத்தாள் கசிந்தது பேராசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நேற்று பி.காம்., ஐந்தாவது செமஸ்டருக்கான 'அட்வான்ஸ் அக்கவுன்டிங்' தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான வினாத்தாள், நேற்று முன்தினம் மாலையில் வாட்ஸாப்பில் கசிந்தது. இது, மாணவர்களின் வாட்ஸாப் குழுக்களுக்கு அதிகம் பகிரப்பட்டது. பலரும் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து வைத்து கொண்டனர்.
இந்நிலையில், வாட்ஸாப்பில் கசிந்த வினாத்தாளும், நேற்று தேர்வின் போது கொடுக்கப்பட்ட வினாத்தாளும் ஒன்றாக இருந்தது. இதனால், ஏற்கனவே தெரிந்திருந்த மாணவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டனர். இவ்விஷயத்தை அறிந்த பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரிக்கின்றனர்.
இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கூறியுள்ளதாவது:
நேர்மையாக தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு, வினாத்தாள் கசிவின் மூலம் அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்விஷயம், வெளிச்சத்திற்கு வந்த பிறகும், பல்கலைக்கழகம் மவுனம் காப்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

