தலைமையாசிரியர் காலி பணியிடங்கள்... 273 அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு
தலைமையாசிரியர் காலி பணியிடங்கள்... 273 அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:47 AM

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 273 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும், பள்ளி உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலாளி பணியிடங்களும் காலியாக இருப்பதால், ஆசிரியர்களே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில், துவக்கப் பள்ளி 937, நடுநிலைப் பள்ளி 219, உயர்நிலைப் பள்ளி 183, மேல்நிலைப் பள்ளி 153 என, 1,492 அரசு பள்ளிகள் உள்ளன.
இந்த இரு கல்வி மாவட்டங்களிலும் துவக்கப் பள்ளியில் 129, நடுநிலைப் பள்ளியில் 65, உயர்நிலைப் பள்ளியில் 45, மேல்நிலைப் பள்ளியில் 34 என, மொத்தம் 273 தலைமைஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், இப்பள்ளிகளில் ஆசிரியர் ஒருவரே பொறுப்பு தலைமையாசிரியர் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அரசு பள்ளிகளில் ஒரே ஆசிரியர் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியை பயிற்றுவிப்பதால், மாணவர்களின் கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆண், பெண் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பணியி டங்கள் காலியாக உள்ளன. இதனால், விளையாட்டு திறனும் பாதிக்கப்படுவதோடு, மாணவர்களிடம் போதை பழக்கங்கள் அதிகரித்து வருவது, பெற்றோரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், படிக்கும் மாணவர்களை குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்த்து கொள்வதால், மாணவர்களிடையே போதை பழக்கங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், சிறார் குற்றங்கள் அதிகரித்து வருவதாக, பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக கல்வித்துறை, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர் பணிக்கான நபர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:
புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, தகுதி தேர்வு கட்டாயமென, 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இதனால், தலைமையாசிரியர் பணியிடம் பதவி உயர்வு வழங்கப்படாமல் காலியாகவே உள்ளது.
ஆனால், ஆசிரியர் பணியிடங்களுக்கு, புதிய நியமனங்கள் தவிர்க்கப்பட்டு, தொகுப்பூதியத்தில் பணி வழங்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்வு கட்டாயமென, கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு பின், தலைமையாசிரியர்கள் காலி பணியிடம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பணியிடங்கள், சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ஆசிரியர்கள் மனஉ ளைச்சல் தலைமை ஆசிரியர் இல்லாததால், ஆசிரியர்களே பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றுவதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் அதிகாரமும், பொறுப்பு தலைமையாசிரியருக்கு கிடைக்காது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது, என்றார்.