ஒரு பணியாளர்; மூன்று மையங்கள் - அங்கன்வாடிகள் பரிதவிப்பு
ஒரு பணியாளர்; மூன்று மையங்கள் - அங்கன்வாடிகள் பரிதவிப்பு
UPDATED : டிச 16, 2025 10:15 AM
ADDED : டிச 16, 2025 10:18 AM

திருப்பூர்:
' ஒரு அங்கன்வாடி பணியாளர் மூன்று மையங்களை கையாள முடியுமா, புதிய நியமனம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. சிரமத்தை உயர் அலுவலர்கள் புரிந்து கொள்வதில்லை,' என, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 894 அங்கன்வாடி மையங்கள், 151 மினி அங்கன்வாடி மையம், பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்கள் சேர்த்து மொத்தம், 1,402 மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர் மட்டுமே உள்ளனர்.
காலை ஓரிடம் மதியம் வேறிடம்
இதனால், ஒரு பணியாளர் தான் பணிபுரியும் ஒரு மையம் மட்டுமின்றி, மேலும் இரண்டு மினி மையங்களை நிர்வாகிக்க வேண்டியுள்ளது. காலை ஓரிடம், மதியம் மற்றொருமிடமும் சென்று வருகின்றனர்.
உதவியாளர் இல்லாத, பெரிய மையங்களில், உதவிக்கு ஆட்கள் இல்லாததால், ஒரு பணியாளர், 25க்கும் அதிகமான குழந்தைகளை நிர்வகிக்க வேண்டியுள்ளது. மினி மையங்களில் உதவியாளர் என்ற பணியிடம் இதுவரை உருவாக்கப்படாததால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஒரிடத்தில் சரிவர பணிபுரிய முடியாத சிரமங்கள் ஏற்படுகிறது. ஏப்ரல் மாதத்துக்கு பின் பணியாளர், உதவியாளர் நேர்காணல் நடக்கவில்லை.
அக். இறுதி, நவ. துவக்கத்தில் சொற்ப அளவிலான உதவியாளர்கள் (50 - 80 பேர்) தேர்வு செய்யப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு அனுப்பபட்டனர். ஆனால், இன்னமும், 150க்கும் அதிகமான உதவியாளர் பணியிடங்கள் முழுமை பெறாமல் உள்ளது; 57 பணியாளர்கள் நியமிக்க வேண்டியுள்ளது.
பெயரளவுக்கு புதிய நியமனம்
ராமாத்தாள், மாவட்ட தலைவர், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்:
ஒரு அங்கன்வாடி பணியாளர் மூன்று மையங்களை கையாள முடியுமா, புதிய நியமனம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. சிரமத்தை உயர் அலுவலர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு போராட்டத்திலும் மையங்கள் மற்றும் குழந்தைகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவையான பணியாளர், உதவியாளர் நியமிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

