சிறப்பு தற்செயல் விடுப்பை வாரி வழங்கும் அதிகாரிகள்; மாணவர்கள் படிப்பு பாதிக்கும் அபாயம்
சிறப்பு தற்செயல் விடுப்பை வாரி வழங்கும் அதிகாரிகள்; மாணவர்கள் படிப்பு பாதிக்கும் அபாயம்
UPDATED : டிச 16, 2025 09:05 PM
ADDED : டிச 16, 2025 09:07 PM

சென்னை:
சம்பளத்துடன் கூடிய, சிறப்பு தற்செயல் விடுப்பை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இஷ்டத்துக்கு எடுப்பதால், பள்ளிக்கல்வித் துறையே ஆட்டம் கண்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக போராடக் கூடாது என்பதற்காக, அவற்றின் நிர்வாகிகளுக்கு, பல்வேறு சலுகைகளை, அதிகாரிகள் வழங்குகின்றனர்.
அவற்றில் முக்கியமானது, சிறப்பு தற்செயல் விடுப்பு. அதாவது, ஆசிரியர்களின் நலனுக்காக, ஆசிரியர்களால் சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன.
சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், அதிகாரிகளை சந்தித்து, ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்களை அளிக்கவும், ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படுத்தவும், முக்கிய நிர்வாகிகளுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது.
இந்த சங்கங்களின் நிர்வாகிகளில், அதிகபட்சமாக ஐந்து பேருக்கு, ஓராண்டுக்கு 15 நாட்கள், சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என, 1977ல் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஆசிரியர் சங்கங்கள், அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தாமல் இருக்க, அங்கீகாரம் பெறாத சங்கங்களின் நிர்வாகிகளுக்கும், விதிமுறைகளை மீறி, பல நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பை வழங்குகின்றனர் .
மேலும், அதிகபட்சம் ஐந்து நபர்கள் என்ற விதிமுறையை மீறி, அதிகமான நபர்களுக்கு, இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இது குறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவற்றுக்கு, அரசு அங்கீகாரம் வழங்குகிறது. அதன் பொறுப்பாளர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை சிறிது சிறிதாக மாறி, தற்போது, சிறப்பு தற்செயல் விடுப்பை, முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.
ஒரு சங்கத்திற்கு, மாநிலத்தில் ஐந்து பேர் என்ற நிலை மாறி, ஒவ்வொரு சங்கத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஐந்துக்கும் மேற்பட்டோர், மாநில பொறுப்பு வகிப்பதாகக் கூறி, தலா 15 நாட்கள், சிறப்பு தற்செயல் விடுப்பை பெறுகின்றனர்.
தற்செயல் விடுப்பை பெறுவோரில் பலர், பள்ளிகளுக்கு சென்று, பாடம் நடத்தும் ஆசிரியர்களை சந்தித்து, சந்தா வசூலிக்கின்றனர். அவர்கள் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடங்களை, மற்றவர்கள் நடத்த வேண்டி உள்ளது. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

