தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு தில்லுமுல்லு செய்தவர் சிக்கினார்
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு தில்லுமுல்லு செய்தவர் சிக்கினார்
UPDATED : செப் 15, 2025 12:00 AM
ADDED : செப் 15, 2025 08:31 AM

சென்னை:
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில், கழிப்பறைக்கு சென்று, மொபைல் போனில் விடை தேடிய இளைஞர் பிடிபட்டார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் யு.பி.எஸ்.சி., தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி - 2 தேர்வுக்கான அறிவிப்பு, மே 28ம் தேதி வெளியானது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில், ராணுவத்தில் 208; கடற்படையில் 42; விமானப்படையில் 120; கடற்படை அகாடமியில் 36 என மொத்தம், 406 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, நேற்று நாடு முழுதும் போட்டி தேர்வு நடந்தது.
சென்னை புளியந்தோப்பில் உள்ள தனியார் பள்ளியில், 288 பேர் தேர்வு எழுதினர். அப்போது, தேர்வர் ஒருவர், கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். 10 நிமிடங்களுக்கு மேலாகியும், அவர் தேர்வறைக்கு திரும்பவில்லை. சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர், கழிப்பறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது, அந்த தேர்வர், தான் மறைத்து வைத்திருந்த மொபைல் போனை பயன்படுத்தி, கூகுளில் விடைகளை தேடுவதை பார்த்து, அவரை கையும், களவுமாக பிடித்தார். இது குறித்து, தேர்வு நடந்த பள்ளியின் முதல்வர், திரு.வி.க., நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், சென்னை பெருங்குடியை சே ர்ந்த, சேக் ஒமர் ரியாஸ், 18, என, தெரியவந்தது. உள்ளாடைக்குள் மொபைல் போனை மறைத்து, தேர்வறைக்கு எடுத்து சென்றுள்ளார். தேர்வறையில் வினாத்தாளின் சில பக்கங்களை கிழித்துக் கொண்டு, கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
அங்கு, வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கான விடைகளை, கூகுளில் தேடியபோது, தேர்வு கண்காணிப்பாளரிடம் வசமாக சிக்கினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.