பாதியான சென்னை பல்கலையின் மூலதன நிதி; ஒன்றரை ஆண்டில் ரூ.170 கோடி அவுட்!
பாதியான சென்னை பல்கலையின் மூலதன நிதி; ஒன்றரை ஆண்டில் ரூ.170 கோடி அவுட்!
UPDATED : டிச 31, 2025 01:16 PM
ADDED : டிச 31, 2025 01:21 PM

நிதி நெருக்கடியில் சிக்கித்திணறும் சென்னை பல்கலையின் மூலதன நிதியும், 346 கோடி ரூபாயில் இருந்து, 176 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணைவேந்தர் இல்லாத ஒன்றரை ஆண்டுகளில், இந்த அளவுக்கு மூலதன நிதியில் கை வைக்கப்பட்டு உள்ளது, பல்கலையின் செயல்பாடுகளை முடக்கும் செயல் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில், பல்கலைகளுக்கான துணைவேந்தரை நியமிப்பது முதல், நிதி பெறுவது வரை, அனைத்து விஷயங்களிலும், மத்திய அரசுடன், மாநில அரசு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, 10 ஆண்டுகளுக்கும் மேல், மாநில பல்கலைகளில் ஆராய்ச்சி திட்டங்கள் பெரிய அளவில் நடக்காததால், பல்கலை மானியக்குழுவின் நிதியில், 80 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கவில்லை.
அதேசமயம், தனியார் பல்கலைகள் பெருகிவிட்டதாலும், கலை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததாலும், மாநில பல்கலைகளிலும், அவற்றின் இணைப்பு கல்லுாரிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.
முக்கியமாக, உயர்கல்வியில், ஆராய்ச்சியின் வாயிலாக பிஎச்.டி., பெறுவோரின் தகுதி குறைந்துள்ளதாக, பல்கலைகளின் வேந்தரும், தமிழக கவர்னருமான ரவி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பல்கலைகளில் நிரந்தர பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைந்ததும், ஆளுங்கட்சிக்கு கப்பம் கட்டிவிட்டு, தகுதியில்லாத பேராசிரியர்கள் பணிக்கு வருவதும்தான் இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது தனி கதை.
முரண்பாடு
'தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம், மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம்' என, தி.மு.க., அரசு தெரிவித்த நிலையில், இதுவரை உயர்கல்விக்கான கொள்கை உருவாக்கப்படவில்லை. இதனால், யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை கடைபிடிப்பதா, கைவிடுவதா எனத் தெரியாமல், மாநில பல்கலைகளின் பாடத்திட்டம் மற்றும் ஆட்சி மன்ற குழுவினர் குழம்பி உள்ளனர்.
மாநிலத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலையில், கடந்த 10 ஆண்டுகளில், 465 பேர் ஓய்வுபெற்ற நிலையில், அவர்களுக்கு, 95.44 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதற்கான வழக்கில், தமிழக நிதித்துறை செயலர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்காக, சமீபத்தில் நடந்த ஆட்சி மன்ற குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, பல்கலையின், 'கார்ப்பஸ் பண்ட்' எனும் மூலதன நிதியில் இருந்து, 170 கோடி ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில், 74 கோடி ரூபாயை விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி மூல தனத்தை எடுத்து செலவு செய்ததன் காரணமாக, பல்கலையின் மூலதன நிதி, 346 கோடி ரூபாயில் இருந்து, 176 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. இத்தகைய போக்கு, மதுரை காமராஜர் பல்கலையை போன்று, சென்னை பல்கலையை முடமாக்கும் செயல் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பல்கலையை பாதுகாக்கப்படுமா; பலிகொடுக்கப்படுமா என்பது, தமிழக அரசின் கையில்தான் உள்ளது.
சென்னை பல்கலையில் மூன்று வகையான நிதி உள்ளது. இதற்கான வைப்பு தொகைக்கான வட்டியை செலவு செய்யலாம்; வைப்பு தொகையில் கைவைக்கக்கூடாது என்பது விதிமுறை.
மூலதன நிதி:
விவசாயிகளின் விதை நெல் போன்றது மூலதன நிதி. இந்த நிதி, 346 கோடி ரூபாய் வரை இருந்தது. அதிலிருந்துதான் தற்போது, 174 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது
பங்களிப்பு ஓய்வூதிய நிதி:
2004க்கு பின் பணியில் சேர்ந்தவர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. அதே அளவு தொகை, பல்கலை சேர்த்து வங்கியில் செலுத்துகிறது. இவை, ஓய்வூதிய நிதியாக தரப்படுகிறது. இந்த நிதியில் இருந்து, 73 கோடி ரூபாயை பல்கலை நிர்வாகம் செலவு செய்துள்ளது. இந்த பணம் மீண்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நினைவு இருக்கை நிதி:
பல்கலையில் மறைந்த பேராசிரியர்கள், அறிஞர்களின் பெயர்களில் நினைவிருக்கை உள்ளது. இதற்காக 'டிபாசிட்' தொகையாக 146 கோடி ரூபாய் உள்ள நிலையில், அதில் இருந்து, 2.50 கோடி ரூபாய் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது.
எங்கே சமூக நீதி?
பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட
மூன்று முன்னோடி பல்கலைகளில், சென்னை பல்கலையும் ஒன்று. சுதந்திரத்துக்கு
பின், சிறப்பு சட்டத்திருத்தம் மூலம், மாநில பல்கலையாக மாற்றப்பட்டது.
பின், 21 பல்கலைகள் உருவாக்கப்பட்டன. பல்கலைகளுக்கு தமிழக அரசு தான்
நிர்வாகி என்றாலும், 15 ஆண்டுகளுக்கும் மேல், மாநில பல்கலைகளை, தமிழக அரசு
கண்டுகொள்ளவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக தவித்து வந்த 97 பேருக்கு,
ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. உத்தரவை ஏற்ற அரசு, நிதி
ஒதுக்கியிருந்தால் பாராட்டி இருக்கலாம். சென்னை பல்கலை, 400 கோடி ரூபாய்
மூலதன நிதியின் வட்டியில் இருந்து நிர்வாகப்பணிகள் நடக்கின்றன. அதிலிருந்து
ஓய்வூதியம் அளிக்க, அவசர ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
துணைவேந்தர்
இல்லாத நிலையில், 100 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்டு, தற்போது மூலதன
நிதி பாதியாக குறைந்துள்ளது. இதை வைத்து, பல்கலையை நிர்வகிக்க முடியாது.
இதனால், மாணவர்களின் கல்விக்கட்டணம் உயர்த்தப்படும். நிரந்தர
பேராசிரியர்கள் குறைக்கப்பட்டு, கவுரவ பேராசிரியர் பணியிடம்
உருவாக்கப்படும். ஏழை மாணவர்கள் இனி, சென்னை பல்கலை வாசலை மிதிக்க
முடியாது. ஏழை மாணவர்களை படிக்க விடாமல் தடுப்பதுதான் தி.மு.க., ஆட்சியின்
சமூக நீதியா?
-பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலர், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை

