எல்விஎம்-3 எம்6 வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து
எல்விஎம்-3 எம்6 வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து
UPDATED : டிச 24, 2025 06:09 PM
ADDED : டிச 24, 2025 06:10 PM

சென்னை:
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிகக் கனமான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம், அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்காக, விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் சாதனை என்றும், தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளின் பிரதிபலிப்பாக இது திகழ்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் கனரக ஏவுதல் திறனை இந்த வெற்றி மேலும் வலுப்படுத்தியுள்ளது. உலகளாவிய வணிக ஏவுதல் சந்தையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை இது உறுதிப்படுத்துகிறது,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “எல்விஎம்-3 ராக்கெட் தனது நம்பகத்தன்மையை நிரூபித்ததன் மூலம், ககன்யான் போன்ற எதிர்கால மனித விண்வெளிப் பயணங்களுக்கு வலுவான அடித்தளம் அமைந்துள்ளது. வணிக ஏவுதல் சேவைகள் விரிவடைவதுடன், உலகளாவிய கூட்டாண்மைகளும் ஆழப்படுகின்றன,” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர்களின் பங்களிப்பால் நாட்டின் விண்வெளித் திட்டம் மேலும் வலுப்பெற்று வருவதாகவும், இந்த சாதனை எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

