UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:46 AM
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கவுன்சிலில், 1.80 லட்சம் டாக்டர்கள் பதிவு செய்து மருத்துவம் பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், வெளியூர்களில் உள்ள டாக்டர்களும் பயன்பெறும் வகையில், புரசைவாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 46 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு தளங்களுடன் மருத்துவ கவுன்சிலுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டடத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
நான்கு மாடிகள் உடைய தளத்தில், முதல் இரண்டு தளங்கள், மருத்துவம் முடித்து பதிவு செய்வோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பல கவுன்டர்கள் இருப்பதால், நீண்ட நேரம் காத்திருக்காமல் டாக்டர்கள் பதிவு செய்ய முடியும்.நான்காவது மாடியில், 50 பேர் அமரக்கூடிய அரங்கம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அத்துடன், எழும்பூர் ரயில் நிலையம் அருகே, மருத்துவ கவுன்சில் செயல்பட உள்ளதால், வெளியூரில் இருந்து வருவோருக்கு பல்வேறு வகையில் வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

