ஹாஸ்டல் மாடியிலிருந்து தவறி விழுந்து ஐ.ஐ.எம்., மாணவர் உயிரிழப்பு
ஹாஸ்டல் மாடியிலிருந்து தவறி விழுந்து ஐ.ஐ.எம்., மாணவர் உயிரிழப்பு
UPDATED : ஜன 07, 2025 12:00 AM
ADDED : ஜன 07, 2025 06:40 PM
பெங்களூரு:
பிறந்த நாள் கொண்டாடிய பெங்களூரு ஐ.ஐ.எம்., மாணவர் தங்கும் விடுதியின் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலே கைலாஷ்பாய் படேல், 29, பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் (ஐ.ஐ.எம்-பி) படித்து வந்தார். அவர் ஹாஸ்டலில் கடந்த ஜன.4ம் தேதி தனது பிறந்தநாளை அங்கு நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது, தனது விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:
நிலே கைலாஷ்பாய் படேல், தனது 29 வது பிறந்தநாளை ஜனவரி 4ம் தேதி தனது நண்பர்களுடன் கொண்டாடிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் விடுதியின் முற்றத்தில் புல்வெளியில் கிடந்தார்.
படேல், பிறந்தநாள் விழா முடிந்து தனது அறைக்கு திரும்பிச் செல்லும் போது, இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து தவறுதலாக விழுந்திருக்கலாம். மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இது மூன்று நாட்களில் வரும். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

