பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்திற்கு கட்டுப்பாடு ஏன் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்திற்கு கட்டுப்பாடு ஏன் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 09:42 AM

மதுரை:
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்க காரணம் குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம் சிவகிரியிலுள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப துவக்கக் கல்வி அலுவலர் அனுமதி மறுத்தார். அதை ரத்து செய்து அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தது.
நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரகதீஷ்குமார் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் எனக்கூறி, அரசு வரம்பு விதித்திருப்பது ஆச்சரியமாக, கவலையாக இருக்கிறது.
குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இது அவர்களின் உடல்நிலையை மட்டுமல்ல, மன நிலையையும் பாதிக்கிறது. நீரிழிவு, மனச்சோர்வு அதிகரிக்கிறது. சுறுசுறுப்பான மனநிலையை கொண்டிருக்க சுறுசுறுப்பாக உடலை வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
பள்ளிகளுக்குரிய பாடத்திட்டத்தில் உடற்கல்வி மற்றும் ஆரோக்கிய கல்விக்கு தினமும் 2 பாடவேளைகள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்படியிருக்க, அரசு விதித்த கட்டுப்பாடு பொருத்தமற்றதாக தோன்றுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் முடிவு விசித்திரமானது. உடற்கல்வி இல்லையெனில், ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.
அரசு பள்ளி, உதவிபெறும், உதவிபெறாத மற்றும் நகராட்சி பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான கொள்கை மற்றும் கட்டுப்பாடு விதிக்கக் காரணம் குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அக்.10 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.