UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:29 AM
திருப்பூர்:
பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை துவக்கப்பட பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரகீம் அங்குராஜ், மாவட்ட கல்வி அலுவலரிடம் அளித்த மனு:
கணியாம்பூண்டியில் உள்ள துவக்கப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கப்பட்ட தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. ஆனால், கணியாம்பூண்டி துவக்கப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சரிகிறது.
அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு துவங்கி, பாட புத்தகம், மதிய உணவு உள்ளிட்ட அனைத்தும் அரசின் சார்பில், இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், மாணவர் எண்ணிக்கையை பள்ளி நிர்வாகம் உயர்த்த ஆர்வம் காட்டாமல் இருப்பது, வருத்தமளிக்கிறது.
இப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை உள்ளதா என்பதே கேள்விக்குறி. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றக் கூடிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

