யு.பி.ஐ.,யில் பணம் அனுப்ப இனி கைரேகை, முக அடையாளம் போதும்
யு.பி.ஐ.,யில் பணம் அனுப்ப இனி கைரேகை, முக அடையாளம் போதும்
UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM
ADDED : ஜூலை 30, 2025 09:10 AM
புதுடில்லி :
யு.பி.ஐ., எனப்படும், உடனடி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் பணம் அனுப்ப, ரகசிய எண் பயன்படுத்துவதற்கு பதில், கைரேகை மற்றும் முக அடையாளம் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற அரசு நிறுவனம் யு.பி.ஐ., எனப்படும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியது.
இதன் மூலம் யு.பி.ஐ., செயலி வைத்திருப்போர், வங்கி கணக்கிற்கு 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம். இது தற்போது நாடு முழுதும் பிரபலமாக உள்ளது. மாதந்தோறும் சராசரியாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் யு.பி.ஐ., வாயிலாக பணப்பரிவர்த்தனை நடக்கிறது.
ஒருவருக்கு பணம் அனுப்பும் போது, பின் நம்பர் எனப்படும் நான்கு இலக்க அல்லது ஆறு இலக்க ரகசிய எண்ணை பதிவு செய்ய வேண்டும். தற்போது என்.பி.சி.ஐ., அதில் கூடுதல் வசதியை சேர்க்க உள்ளது.
இந்த ரகசிய எண்ணுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில், கைரேகையை பதிவு செய்தும், முக அடையாளத்தை பதிவு செய்தும் இனி பணத்தை அனுப்பலாம். இது விரைவில், ஜிபே, போன்பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

