மருத்துவ சீட் பெற இடைத்தரகரை நம்பி ஏமாறாதீர்: கமிஷனர் அருண்
மருத்துவ சீட் பெற இடைத்தரகரை நம்பி ஏமாறாதீர்: கமிஷனர் அருண்
UPDATED : ஆக 19, 2025 12:00 AM
ADDED : ஆக 19, 2025 08:10 AM
சென்னை:
மருத்துவ கல்லுாரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கமிஷனர் அருண் வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
தினந்தோறும் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி, இடைத்தரகர்களை நம்பி லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து பலர் ஏமாறுவது தெரிகிறது. இதுகுறித்த புகார்கள் சமீப காலமாக அதிகமாக பெறப்படுகின்றன.
பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மருத்துவ கல்லுாரியில் இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். அரசின் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பது, கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு மருத்துவ படிப்பிற்கான இடத்திற்கான ஆலோசனை பெறுவது ஆகியவற்றை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

