தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்! நீட் தேர்வு மாணவர்களுக்கு அட்வைஸ்
தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்! நீட் தேர்வு மாணவர்களுக்கு அட்வைஸ்
UPDATED : மே 03, 2025 12:00 AM
ADDED : மே 03, 2025 09:25 AM

திருப்பூர்:
நீட் தேர்வு வினாத்தாளில், தவறான விடைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தினார்.
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும், 4ம் தேதி மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வெழுத, 3,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஏழு மையங்களில் தேர்வு நடக்கவுள்ள நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுடன் இணைந்த, மாவட்ட உயர்கல்வித்துறையினர் சுறுசுறுப்பாக துவக்கியுள்ளனர். நீட் தேர்வெழுத உள்ளவர்களுக்கு ஹால்டிக்கெட் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.
இன்று நீட் தேர்வு நடக்கும் மையம், பாதுகாப்பு விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகும்.
நீட் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியலில் தலா, 45 மதிப்பெண் வீதம் மொத்தம், 180 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கேட்கப்படும். பிரிவு ஏ பிரிவில், 35 கேள்விகளுக்கும், பிரிவில் பி யில், பத்து கேள்விகளும் இடம் பெறும். ஒவ்வொரு பாடத்திலும் பிரிவு பி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை துாண்டும் திறனறி வினாக்களாக இருக்கும். எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை எழுதிட வேண்டும்.
ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு மதிப்பெண் வீதம் மொத்தம், 720 மதிப்பெண். தவறான விடைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே, வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து, அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து எழுதிட வேண்டும்; அவசரப்படக்கூடாது.
ஓ.எம்.ஆர்., ஷீட் என்பதால் ஒரு முறை விடையை எழுதி விட்டால் மாற்றம் செய்ய இயலாது. எனவே முழு கவனத்துடன் விடை எழுதிட வேண்டும். மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல், விலங்கியல் பகுதிகளுக்கு முதலில் விடைஅளியுங்கள். இயற்பியல், வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே, 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே, தன்னம்பிக்கை, பொறுமையுடன் சிந்தித்து விடை எழுத வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

