பாராட்ட கல்வி அமைச்சருக்கு மனமில்லையா?: ஆசிரியர்கள் குமுறல்
பாராட்ட கல்வி அமைச்சருக்கு மனமில்லையா?: ஆசிரியர்கள் குமுறல்
UPDATED : செப் 09, 2025 12:00 AM
ADDED : செப் 09, 2025 12:13 PM

மதுரை:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சென்டம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர், தமிழில் சென்டம் பெற்ற மாணவர்களை கல்வித்துறை பாராட்டிய நிலையில், 'சென்டம்' மதிப்பெண் பெற்றுத்தந்த ஆசிரியர்களையும் பாராட்ட மனமில்லையா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர், தமிழில் சென்டம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நேற்றுமுன்தினம் திருச்சியில் கல்வி அமைச்சர் மகேஷ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அமைச்சர் நேரு, கல்விச் செயலாளர், இயக்குநர்கள் பங்கேற்றனர்.
பிளஸ் 2வில் 1100க்கும், பத்தாம் வகுப்பில் 1200க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றதால் பலருக்கு போதிய இடவசதி இல்லை. இதனால் வெளிப்பகுதியில் பந்தல் ஏற்பாடு செய்து அமர வைக்கப்பட்டனர். அதேநேரம் தமிழ் உட்பட பாடம் வாரியாக சென்டம் பெற்றுத்தந்த ஆசிரியர்களை அழைக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
இப்பாராட்டு விழாவை வரவேற்கிறோம். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அழைக்கப்படுவதால் என்னதான் ஏற்பாடு செய்தாலும் அதில் விமர்சனம் எழத்தான் செய்யும். இதை தவிர்க்க மாவட்டம் வாரியாக பாராட்டு விழா நடத்த கல்வித்துறை திட்டமிட வேண்டும்.
அதில், பள்ளி, மாணவர்கள் 'சென்டம்' பெற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும் அழைத்தும் கவுரவிக்க வேண்டும். மாவட்டம் வாரியாக நடத்துவதால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதும் எளிது. வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறையை கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என்றனர்.