சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 11:08 AM

புதுடில்லி:
சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75 சதவீதம் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி தரப்படும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2026ம் ஆண்டு வரவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் பங்கேற்க பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான தேவைகளை எடுத்துக்காட்டும் வகையில், இந்த மாணவர்கள், தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கு 9-10ம் வகுப்பு மற்றும் 11-12ம் வகுப்புகளின் அனைத்து பாடங்களையும் இரண்டு ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும்.
மேலும் அவர்கள் வழக்கமான பள்ளியில் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும். மாதாந்திர தேர்வுகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் வருகைப்பதிவு ஆகியவை உள்மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும்.
சிபிஎஸ்இ வழங்கும் அனைத்து பாடங்களிலும், உள் மதிப்பீடு என்பது என்இபி-2020 இன் படி, மதிப்பீட்டின் கட்டாய ஒருங்கிணைந்த பகுதியாகும். இது 2 வருட செயல்முறையாகும். ஒரு மாணவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், அவர்களது உள் மதிப்பீட்டைச் செய்ய முடியாது. உள் மதிப்பீட்டில் செயல்திறன் இல்லாத நிலையில், ஒரு மாணவரின் தேர்வு முடிவை அறிவிக்க முடியாது.
10ம் வகுப்பில், மாணவர்கள் கட்டாய ஐந்து பாடங்களுடன் கூடுதலாக இரண்டு பாடங்களையும், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடத்தை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.