புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் இலக்கை அடைய முறைகேடு என புகார்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் இலக்கை அடைய முறைகேடு என புகார்
UPDATED : செப் 22, 2025 12:00 AM
ADDED : செப் 22, 2025 08:29 AM

கோவை:
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கோவையில் நடப்பாண்டில் 30,871 பேர் கற்போர்களாகக் கண்டறியப்பட்டு, அடிப்படை கல்வி அளிக்கப்படுகிறது. இதில், இலக்கை எட்டுவதற்காக சில இடங்களில், போலி கணக்கு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் பேரூர், தொண்டாமுத்துார், காரமடை, ஆனைமலை உள்ளிட்ட 15 வட்டாரங்களில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுத்தரப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளிகள், எழுத்தறிவு மையங்களாக செயல்படுகின்றன.
குறிப்பிட்ட எண்ணிக்கையில், புதிய கற்போரை கண்டறிந்து பயிற்சி அளிக்க, அங்குள்ள ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களை இணைப்பது மற்றும் கற்போரை அடையாளம் காண்பது போன்ற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில் இலக்கை எட்டுவதற்காக, நகர்ப்புறங்களில் உள்ள சில மையங்களில், ஏற்கனவே பயிற்சி பெற்று, தேர்வு எழுதியவர்களையும், அடிப்படை எழுத்தறிவு உள்ளவர்களையும் மீண்டும் தேர்வு எழுத வைப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இத்திட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர்களுக்கு சரியாக, சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு வட்டாரத்துக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைய முடியவில்லை என்பதற்காக, போலியான கணக்குகளை காட்ட கூடாது என, மையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.