UPDATED : மே 10, 2025 12:00 AM
ADDED : மே 10, 2025 10:40 AM
சென்னை:
டில்லியை தலைமையிடமாக கொண்ட பிட்ஜி என்ற தனியார் மையம், ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கிறது. 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில், 2 - 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இந்நிலையில் திடீரென நிதி நெருக்கடியில் இந்நிறுவனம் சிக்கியதால், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதனால் பல கிளைகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், வேலையை விட்டுச் சென்றனர். பயிற்சி மையல்கள் மூடப்பட்டன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பயிற்சி மையத்தில், 140 மாணவர்களிடம் இருந்து, நான்கு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். பயிற்சி அளிக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் அலைக்கழித்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
இந்நிறுவனத்தின் அடையாறு கிளையும் நேற்று திடீரென மூடப்பட்டது. இதில் கட்டணம் செலுத்திய மாணவர்களின் பெற்றோர், நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் மட்டும் புகார் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், 60 லட்சம் ரூபாய் இழந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உள்ள புகாருடன், நேற்று அளிக்கப்பட்ட புகார்களையும், வழக்கு விசாரணையில் போலீசார் இணைத்துள்ளனர்.

