ரூ.40 கோடியில் 15 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள்: அமைச்சர் சேகர்பாபு
ரூ.40 கோடியில் 15 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள்: அமைச்சர் சேகர்பாபு
UPDATED : ஏப் 08, 2025 12:00 AM
ADDED : ஏப் 08, 2025 02:04 PM

சென்னை:
சென்னையில், 15 இடங்களில் அதிவேக இணையதள வசதியுடன் முதல்வர் படைப்பகங்கள், 40 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, சி.எம்.டி.ஏ., தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* சென்னை பாரதி மகளிர் கல்லுாரி கூடுதல் வசதிகளுடன், 25 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். சென்னையில், 9 அரசு பள்ளிகள், 25 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* சென்னையில், 6 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* வட சென்னையில், 13 இடங்கள், பிற பகுதிகளில், இரண்டு இடங்கள் என, 15 இடங்களில், அதிவேக இணையதள வசதியுடன் முதல்வர் படைப்பகங்கள், 40 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* பிராட்வே பிரகாசம் சாலையில், அதிநவீன பொது நுாலகம், 30 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* பாடி, ஷெனாய் நகர், செரியன் நகர், அண்ணா நகர், நெசிலிச்சேரி ஆகிய ஐந்து இடங்களில், அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், 37 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* பெரம்பூர், ராயபுரம், கொளத்துார், துறைமகம் ஆகிய இடங்களில், குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள், 8 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* சேத்துப்பட்டு, மணலி, ராயபுரம், வியாசர்பாடி, கிண்டி, மதுரவாயல், பெருங்குடி ஆகிய ஏழு இடங்களில் பன்னோக்கு மையங்கள், 45 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* பெரியார் நகர், சைதாப்பேட்டை தாடண்டர் நகர், பல்லாவரம், சித்தாலபாக்கம், ராயபுரம், வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகிய ஆறு இடங்களில், 22 கோடி ரூபாயில் அமுதம் அங்காடிகள் கட்டப்படும்
* வண்டலுார் கீரப்பாக்கத்தில், 5 ஏக்கர் பரப்பளவில், 11 கோடி ரூபாய் செலவில், உணவு பொருள் கிடங்கு அமைக்கப்படும்
* ராயபுரம் சஞ்சீவிராயன்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில், 6 கோடி ரூபாயிலும், ராயபுரம் பனைமரத்தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில், 4 கோடி ரூபாயிலும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்
* கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம், 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், 21 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* சென்னை குரோம்பேட்டையில், எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா கல்லுாரி சந்திப்பில், ஜி.எஸ்.டி., சாலையின் குறுக்கே, 10 கோடி ரூபாயில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்
இவ்வாறு அவர் அறிவித்தார்.

