10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்; 8.96 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்; 8.96 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
UPDATED : மார் 21, 2025 12:00 AM
ADDED : மார் 21, 2025 09:08 PM
பெங்களூரு:
நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு இன்று துவங்கியது; ஏப்ரல் 4ம் தேதி வரை தேர்வு நடக்கும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை, கர்நாடக தேர்வு ஆணையம் செய்துள்ளது.
இது குறித்து, கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டு தேர்வு இன்று துவங்கிவுள்ளது; ஏப்ரல் 4ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும். பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. இம்முறை அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளின் 8,96,447 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். 4,61,563 மாணவர்கள், 4,34,884 மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடப்பதால், தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் 200 மீட்டர் எல்லை, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை சுற்றிலும், 200 மீட்டர் எல்லையில் நகல் எடுக்கும் கடைகள், இன்டர்நெட் சென்டர்களை மூட வேண்டும்.
தேர்வு மையங்களின் அருகில், அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். மையங்களில் ஓ.ஆர்.எஸ்., பானம், முதலுதவி சிகிச்சை பெட்டிகள் வைத்திருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் ஊழியர்கள், பறக்கும் படை அதிகாரிகளை தவிர, வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை. ஒவ்வொரு தேர்வு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இம்முறை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'பேஸ் டிடெக்ஷன்' செய்யப்படுகிறது. எனவே, மாணவ - மாணவியர் ஒழுங்கை பின்பற்ற வேண்டும்.
வினாத்தாள் கசிந்துள்ளது அல்லது தேர்வு தள்ளி வைக்கப்பட்டது போன்ற வதந்திகளை மாணவர்கள் நம்பக்கூடாது; நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும். தேர்வு நடக்கும் நாட்களில் உடலை வருத்திக் கொள்ளும் வேலைகளை செய்யாமல், ஊட்டச்சத்தான உணவை சாப்பிட்டு தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.
கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
தேர்வு கண்காணிப்பாளர்கள், கேமரா இல்லாத சாதாரண மொபைல் போன் மட்டுமே வைத்திருக்கலாம்.
தேர்வு ஊழியர்கள், மாணவர்கள் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தக் கூடாது.
எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்வது, பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் இல்லாத நபர்கள் தேர்வு மையங்களுக்குள் நுழைவது, வீடியோவில் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, மாணவர்கள் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.
மாணவர்களுக்கு வாழ்த்து
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பி.எம்.டி.சி., பஸ்களில் இலவச பயணத்துக்கு அனுமதி அளித்துள்ளன. மாணவ - மாணவியர் தங்களின் தேர்வு நுழைவுச் சீட்டை காண்பித்து, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
தேர்வு எழுதும் மாணவர் - மாணவியருக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உட்பட பலரும் வாழ்த்து கூறினர்; மன திடத்துடன் தேர்வு எழுதும்படி ஊக்கப்படுத்தி உள்ளனர்.

