UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 08:30 AM

புதுடில்லி:
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்குபெறுவோரின் முக அடையாளத்தை ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் சரிபார்க்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தேர்வு எழுதுவோரின் முக அடையாளத்தை சரிபார்க்க ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
இது குறித்து யு.பி.எஸ்.சி., தலைவர் அஜய்குமார் கூறியதாவது:
சிவில் சர்வீசஸ் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும், 'பேஸ் ரெகக்னிஷன்' எனப்படும் தேர்வர்களின் முகத்தை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை முயற்சி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 14ல் நடந்த தேசிய ராணுவ அகாடமி தேர்வு, தேசிய கடற்படை அகாடமி தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தேர்வு ஆகியவற்றில் முக அங்கீகார முறை சோதனை செய்யப்பட்டது.
ஹரியானாவின் குருகிராமில், ஒரு சில தேர்வு மையங்களில், தேர்வர்கள் சமர்ப்பித்த புகைப்படங்கள், ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்டது.
வரும் காலங்களில் அனைத்து தேர்வுகளிலும் இந்த முறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சிறந்த மற்றும் வெளிப்படையான முறையில் தேர்வுகளை நடத்த இந்த முறை பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.