மாணவர்களின் தொழில் தேர்வுக்கு நம்பிக்கையான வழிகாட்டி: சென்னை ஐஐடி புதிய முயற்சி
மாணவர்களின் தொழில் தேர்வுக்கு நம்பிக்கையான வழிகாட்டி: சென்னை ஐஐடி புதிய முயற்சி
UPDATED : மே 09, 2025 12:00 AM
ADDED : மே 09, 2025 09:06 AM

சென்னை:
ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் இயற்பியல் மற்றும் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் துறையில் பணியாற்றும் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்ஷரி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் புதிய பொட்காஸ்ட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்காஸ்ட் மூலம் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள தொழில்வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். துறைத் தேர்வுகளை எளிதாக்கும் நோக்கத்துடன் தொடக்கம் பெற்ற இந்த முயற்சி, கல்வித் துறையில் புதிய பார்வையை ஏற்படுத்தவிருக்கிறது.
இந்த போட்காஸ்ட், ஸ்பாடிபை, யு-டியூப், ஆப்பிள் பாட்காஸ்ட்ஸ் உட்பட அனைத்து முக்கிய ஓலி-ஒளி தளங்களிலும் கேட்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறிகையில், திறமையான மாணவர்கள் எந்தத் துறையிலும் தங்களது ஆர்வத்தை பின்பற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாதைகளை உருவாக்க வேண்டும், என தெரிவித்தார்.
போட்காஸ்ட் தொடர் குறித்து பேசிய சென்னை ஐஐடி பேராசிரியர் மகேஷ் பஞ்சக்ஷரி,கூறுகையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில், அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் குறித்த தவறான தகவல்களை குறைத்து, நம்பகத்தன்மையை உறுதிசெய்வது இன்றியமையாததாக உள்ளது என்றார்.
உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை இந்தியக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க, ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்ஷரி தலைமையிலான குழுவினர் சாஸ்த்ரா என்ற புதிய தொழில்நுட்ப இதழை தொடங்கினர். இது, நாட்டிலேயே ஒரு உயர்கல்வி நிறுவனத்திலிருந்து வெளியிடப்படும் முதலாவது தொழில்நுட்ப இதழாகும்.
மாணவர்களின் கல்விசார்ந்த விருப்பங்களுக்கும், நடைமுறை தொழில்வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க சென்னை ஐஐடி பேராசிரியர் மகேஷ் பஞ்சக்ஷரி உருவாக்கிய போட்காஸ்ட் தொடர் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொடர் கீழ்கண்ட அம்சங்களை கொண்டுள்ளது:
* நிபுணர் நேர்காணல்கள்: முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புத்தாக்கத் துறையிலுள்ள நிபுணர்களுடன் உரையாடல்கள்.
* மாணவர் கேள்வி-பதில்கள்: உண்மையான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களும், தவறான கருத்துக்களை நசுக்கும் முயற்சிகளும்.
* தொழில்சார்ந்த நுண்ணறிவு: இந்தியாவிலும், உலகளாவிய மாறுபட்ட தொழில்துறை போக்குகளின் எளிமையான விளக்கங்கள்.
* பன்மொழி அணுகல்: தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சுருக்கமாகக் கிடைக்கும் வசதி.

