UPDATED : செப் 18, 2025 12:00 AM
ADDED : செப் 18, 2025 09:40 AM

கோவை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் பயிற்சி அளிக்க, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் (சமக்ர சிக்சா) வாயிலாக நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 'இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' திட்டத்தில், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவுகள் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில், கூடுதலாக கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகமுள்ள 9 பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப் படுகின்றன. கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 6 ஆய்வகங்கள், 56 கம்ப்யூட்டர்கள், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 4 ஆய்வகங்கள், 43 கம்ப்யூட்டர்கள், துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 5 ஆய்வகங்கள், 49 கம்ப்யூட்டர்கள் ஒதுக்கப்பட் டுள்ளன.
மதுக்கரை, பெரிய நாயக்கன்பாளையம், ஆனைமலை வட்டாரங்களில் தலா ஒரு பள்ளிக்கும், கிணத்துக்கடவு மற்றும் காரமடை வட்டாரங்களில் தலா இரண்டு பள்ளிகளுக்கும் தேவையான ஆய்வகங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளன .
இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டால், 'ஒரு மாணவருக்கு ஒரு கம்ப்யூட்டர்' என்ற அடிப்படையில், கம்ப்யூட்டர் சார்ந்த கற்றல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
கூடுதல் வகுப்பறை தேவை
தொண்டாமுத்துார் போன்ற சில வட்டாரங்களில் செயல்படும் அரசு பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால், நீண்ட நாட்களாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவங்கப்படாமல் இருந்தது. போதிய வகுப்பறை இருந்தால் மட்டுமே, ஆய்வகங்களை முழுமையாக அமைக்க முடியும். ஒரு பள்ளிக்கு அதிகபட்சம் 5 ஆய்வகங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆய்வகங்களுக்கு பெரிய வகுப்பறை தேவைப்படுகிறது. எனவே, அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.