புதுவை பல்கலைக்கழகத்தில் 'தமிழ் கற்கலாம்' பயிலரங்கு தொடக்கம்
புதுவை பல்கலைக்கழகத்தில் 'தமிழ் கற்கலாம்' பயிலரங்கு தொடக்கம்
UPDATED : டிச 24, 2025 08:08 AM
ADDED : டிச 24, 2025 08:10 AM

புதுச்சேரி:
காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 முன்முயற்சியின் கீழ், “தமிழ் கற்கலாம்” என்ற 10 நாள் பயிலரங்கை புதுச்சேரி பல்கலைக்கழகம் தொடங்கிவைத்தது.
சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து, சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழி மற்றும் இலக்கியத் துறையின் சார்பில் இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் மரபை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 30 மாணவர்கள், பேராசிரியர் ஒருங்கிணைப்பாளருடன் பங்கேற்றுள்ளனர்.
துவக்க விழாவில் தமிழியற்புல துறைத்தலைவர் பேராசிரியர் மூ.கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் சுடலைமுத்து தலைமை உரையாற்றி, “தமிழ் கற்றல் என்பது பண்பாட்டு மரபோடு இணைந்த ஆழமான பயணம்” என வலியுறுத்தினார்.
தொடக்க உரையில் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு, “தமிழ் மொழியை வகுப்பறைக்குள் மட்டுமல்லாமல், பண்பாட்டோடு வெளியிலும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். தமிழ்நாடு-காசி இடையிலான பண்டைய ஆன்மீக உறவுகள் வடக்கு-தெற்கு கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தின் 20-வது பீடாதிபதி ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், காசி-திருப்பனந்தாள் மடம் தொடர்பை எடுத்துரைத்து, தமிழ் எழுத்துக்களின் எளிமை மற்றும் பெருமையைப் பாராட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

