அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.42 கோடியில் 'ஹைடெக் லேப்' ; தினமலர் செய்தி எதிரொலி
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.42 கோடியில் 'ஹைடெக் லேப்' ; தினமலர் செய்தி எதிரொலி
UPDATED : செப் 19, 2025 12:00 AM
ADDED : செப் 19, 2025 09:45 AM

கோவை:
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் 2,996 நடுநிலை மற்றும் 540 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.175 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி, நிறைவடைய உள்ளது.
இதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என, 2024ல் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் செயல்படுத்தவில்லை. இதுதொடர்பாக, ஆக., 11ல் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைப்பதற்காக, பள்ளிகளின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 5,059 துவக்கப்பள்ளிகள், 1,548 நடுநிலைப்பள்ளிகள், 629 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 1,173 மேல்நிலைப்பள்ளிகள் என, 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதில், முதற்கட்டமாக மேல்நிலைப்பள்ளிகளில், ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
பள்ளிகளின் தேவை அடிப்படையில், அதிகாரிகள் விவரங்களை சேகரித்து வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக, ரூ.42 கோடியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.