மாவட்டத்தில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 342 மாணவர் தேர்ச்சி
மாவட்டத்தில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 342 மாணவர் தேர்ச்சி
UPDATED : மார் 17, 2026 02:59 PM
ADDED : மார் 17, 2026 03:05 PM

ஈரோடு:
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த ஜன., 10ல் தமிழகத்தில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 27 மையங்களில் நடந்த தேர்வில், 6,529 மாணவ, மாணவியர் எழுதினர். முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இதில், 117 மாணவர், 225 மாணவியர் என, 342 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் ஐந்தாமிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சி.இ.ஓ., மான்விழி பாராட்டு தெரிவித்தார்.
அரசுப்பள்ளி முதலிடம்
என்.எம்.எம்.எஸ்., தேர்வை, பெருந்துறை வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த, 24 மாணவ, மாணவியர் எழுதினர். இதில், 21 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவி மதுமிதா, 180க்கு 157 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் ஐந்தாமிடம் பிடித்தார். இப்பள்ளி தொடர்ந்து, 13வது ஆண்டாக அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இரண்டாமிடம்...
பவானிசாகர் அருகேயுள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர், 15 பேர் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மத்திய அரசு நிதி உதவியாக மாதந்தோறும், 1,000 ரூபாய் என, 12ம் வகுப்பு வரை வழங்கப்படும்.

