ADDED : செப் 09, 2025 11:05 PM

புதுடில்லி:புதிய கார் வாங்கிய அன்றே, தவறுதலாக ஓட்டியதால் ஷோ - ரூம் கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு விழுந்த ஜீப் பலத்த சேதம் அடைந்தது.
கிழக்கு டில்லியில் வசிப்பவர் பிரதீப்,30. பிரீத் விஹாரில் உள்ள ஷோ ரூமில், 'மஹிந்திரா தார் ராக்ஸ்' ஜீப் ஆர்டர் செய்திருந்தார்.
நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு பிரதீப்பிடம் வண்டி ஒப்படைக்கப்பட்டது. பிரதீப்புடன் அவரது மனைவி மானி பவார்,29, வந்திருந்தார்.
முதல் தளத்தில் புதிய ஜீப்பை வாங்கிய பிரதீப் ஷோ - ரூமுக்குள் வண்டியை ஓட்டிப் பார்த்தார்.
பிரதீப், அவரது மனைவி மற்றும் ஷோ ரூம் ஊழியர் விகாஷ் ஆகியோர் வண்டியில் இருந்தனர்.
வண்டியை ஸ்டார்ட் செய்த பிரதீப், ஆக்ஸிலேட்டரை இடைவிடாமல் அழுத்தியதால் வண்டி சீறிப்பாய்ந்து, ஷோ ரூம் கண்ணாடிச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் தலைகுப்புற விழுந்தது.
ஜீப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், காருக்குள் இருந்த மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.