மீண்டும் 'சீட்' கிடைக்குமா? பீதியில் பா.ஜ., - எம்.பி.,க்கள்
மீண்டும் 'சீட்' கிடைக்குமா? பீதியில் பா.ஜ., - எம்.பி.,க்கள்
ADDED : மார் 06, 2024 05:20 AM
பா.ஜ.,வில், 75 வயதை தாண்டியவர்களுக்கு எந்த பதவியும் கிடையாது என்ற எழுதப்படாத விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஓரம்கட்டப்பட்டனர்.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற, பா.ஜ., மேலிடம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
வயதானவர்கள், மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த எம்.பி.,க்கள் ஆகியோரை வெளியேற்ற பா.ஜ., மேலிடம் தயாராகிவிட்டது. சமீபத்தில் பா.ஜ., வெளியிட்ட முதல்கட்ட பட்டியலில் 'சிட்டிங்' எம்.பி.,க்கள் சிலருக்கு, மீண்டும் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
12 பேர்
கர்நாடகா, தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் இரண்டாம் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த பட்டியலில் மீண்டும் தன் பெயர் இடம்பெறுமா என்ற சந்தேகம், கர்நாடகா சிட்டிங் பா.ஜ., - எம்.பி.,க்கள் சிலருக்கு உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளில், பா.ஜ., 25 இடங்களில் வென்றது. இதில் 10 முதல் 12 எம்.பி.,க்களுக்கு, வரும் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று, கடந்த சில மாதங்களாக தகவல் உலா வருகிறது. இதனால் தங்களுக்கு தெரிந்த, டில்லி மேலிட தலைவர்கள் மூலம், 'சீட்' பெறுவதற்கான முயற்சியில், எம்.பி.,க்கள் களம் இறங்கி உள்ளனர்.
புதுமுகங்கள்
கடந்த ஆண்டு நடந்த, ஐந்து மாநில தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ., வென்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் புதுமுகங்கள் முதல்வர் அரியணையில் அமர்த்தப்பட்டனர். கட்சிக்காக உழைக்கும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் இளையவர்களாக இருந்தாலும், முக்கிய பொறுப்புகளை பா.ஜ., மேலிடம் கொடுத்து வருகிறது. இது மூத்த தலைவர்களுக்கு, அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து உள்ளது.
இம்முறை மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும், பா.ஜ., 'சீட்'டுக்கு கடும் போட்டி எழுந்து உள்ளது. முன்பெல்லாம் ஒரு தொகுதிக்கு இரண்டு அல்லது மூன்று பேர் இடையில் போட்டி இருக்கும். இம்முறை 'சீட்'டுக்காக 10 பேர் வரை, வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இதனால் யார் பெயரை பரிந்துரை செய்வது என்று, கர்நாடகா பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அதிர்ச்சியில் உறைந்தார்.
ஒரு வழியாக மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து, வேட்பாளர் பட்டியலை தயாரித்து வைத்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் பட்டியல், டில்லிக்கு பறக்க உள்ளது. பட்டியல் வெளியாகும் போதுதான், யாருக்கு 'சீட்' என்பது தெரியவரும். சீட் விரும்புவர்கள் தங்களுக்கே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று, கோவில், கோவிலாக சென்று வருகின்றனர்.

