ADDED : மார் 07, 2024 03:39 AM
பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, புதுடில்லியில் கர்நாடக தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, புதுடில்லியில் தேசிய தலைவர் நட்டா தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வின் மத்திய பார்லிமென்ட் குழு உறுப்பினருமான எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனையில், தற்போது எம்.பி.,க்களாக உள்ள எட்டு முதல், 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே வேளையில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த சி.டி.ரவி, முருகேஷ் நிரானி, ஸ்ரீராமுலு, சுதாகர், மாதுசாமி, சோமண்ணா உட்பட சிலருக்கு லோக்சபா தேர்தலில் சீட் தர வேண்டும் என்று ஆலோசிப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ம.ஜ.த.,வுக்கு எந்தந்த தொகுதிகள் வழங்கலாம் என்பது குறித்தும் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் இன்று நடக்கின்ற பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்துக்கு பின், இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த பட்டியலில், கர்நாடக வேட்பாளர்களும் இடம்பெறலாம் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
குமாரசாமி உத்தரவு
அதிகாரபூர்வமாக மாண்டியா தொகுதி, ம.ஜ.த.,வுக்கு ஒதுக்காத நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாண்டியா தொகுதிக்கு உட்பட்ட கட்சி பிரமுகர்களுடன் நேற்றிரவு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
'நான் யாருடைய பெயரை அறிவிக்கிறோனோ, அந்த வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள். பா.ஜ., தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்' என்றும் அவர் கூறினார்.

