தேவகவுடா மருமகன் களமிறங்குவாரா? சிவகுமார் தரப்புக்கு ‛'செக்' வைக்க திட்டம்!
தேவகவுடா மருமகன் களமிறங்குவாரா? சிவகுமார் தரப்புக்கு ‛'செக்' வைக்க திட்டம்!
ADDED : பிப் 04, 2024 11:05 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி.,யும், துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரருமான சுரேஷுக்கு பா.ஜ., - ம.ஜ.த., 'குறி' வைத்துள்ளன. இவரை தோற்கடித்து, துணை முதல்வர் சிவகுமாருக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கு, ஆளுங்கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., ஆர்வமாக தயாராகின்றன. வேட்பாளரை தேர்வு செய்வதில் ஈடுபட்டுள்ளன. 2019 லோக்சபா தேர்தல் நேரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்தது. 2024 தேர்தலில் காங்கிரஸ் அரசு உள்ளது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து, லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றன.
இவ்விரு கட்சிகளும், பெங்களூரு ரூரல் காங்., எம்.பி., சுரேஷை தோற்கடித்தே ஆக வேண்டும் என, சபதம் செய்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில், 25ல் பா.ஜ., வெற்றி கொடி நாட்டியது.
ஆளுங்கட்சியாக இருந்தும் காங்கிரஸ், ம.ஜ.த., தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெங்களூரு ரூரல் தொகுதியில் வெற்றி பெற்ற சுரேஷ், காங்கிரசின் மானத்தை காப்பாற்றினார்.
ஓட்டத்துக்கு கடிவாளம்
இம்முறை இவரை தோற்கடிக்க, கூட்டணி கட்சிகள் திட்டம் வகுக்கின்றன. சுரேஷை தோற்கடித்து, சிவகுமாரின் ஓட்டத்துக்கு கடிவாளம் போட வேண்டும். சகோதரர் சுரேஷ் தோற்றால், அரசு அளவில் சிவகுமாருக்கு செல்வாக்கு சரியும் என்பது, பா.ஜ.,வின் எண்ணமாகும். இதற்காக திறமையான வேட்பாளரை தேடுகிறது.
பெங்களூரின், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் மஞ்சுநாத்தை, பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி வேட்பாளராக்க, பா.ஜ., முயற்சிக்கிறது. மஞ்சுநாத், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன். இதன் மூலமாகவே மஞ்சுநாத்தை, அரசியலுக்கு அழைத்து வர, பா.ஜ., முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இவர் போட்டியிட்டால், ம.ஜ.த.,வும் பிரசாரம் செய்யும். பா.ஜ., சின்னம், ம.ஜ.த.,வின் ஆதரவுடன் இவர் எளிதாக வெற்றி பெறுவார் என்பது, கூட்டணி கட்சிகளின் எண்ணமாகும்.
ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனராக இருந்த மஞ்சுநாத், சிறப்பாக பணியாற்றி மக்களின் நம்பிக்கையை பெற்றவர். ஏழை, நடுத்தர வர்க்கத்து நோயாளிகளுக்கு, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க செய்தவர். எனவே இவர் களமிறங்கினால், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷுக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஊரறிந்த ரகசியம்
மற்றொரு பக்கம், சுரேஷ் தோல்வியடைவதை காண, காங்கிரசில் உள்ள சிவகுமாரின் எதிரிகள் ஆர்வத்துடன் காத்திருப்பது, ஊரறிந்த ரகசியம்.
இதை உணர்ந்துள்ள இவர், பெங்களூரு ரூரல் தொகுதியில் அதிக அக்கறை காண்பிப்பார். அதிகமாக பிரசாரம் செய்வார். மற்ற தொகுதிகளில் ஆர்வம் காண்பிக்க முடியாது. இது பா.ஜ.,வுக்கு லாபமாக இருக்கும்.
இதை மனதில் கொண்டே, இவரை ஒரே தொகுதியில் கட்டிப்போட, பா.ஜ., - ம.ஜ.த., திட்டமிடுகின்றன.

