சி.ஏ.ஏ.,வில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்காதது ஏன்: அமித் ஷா விளக்கம்
சி.ஏ.ஏ.,வில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்காதது ஏன்: அமித் ஷா விளக்கம்
ADDED : மார் 15, 2024 12:43 AM
புதுடில்லி: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தில் பார்சிக்கள், கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை என்ற கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டி:
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாக்., மக்கள் தொகையில் ஹிந்துக்கள் 23 சதவீதமாக இருந்தனர். இப்போது, 3.7 சதவீதம் மட்டுமே ஹிந்துக்கள் உள்ளனர்.
மீதம் இருந்தவர்கள் எங்கே போயினர்; அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை. அந்நாட்டில் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.
வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலும் இதே நிலைதான். அந்த மூன்று நாடுகளும் முஸ்லிம்களுக்கு என பிரித்து கொடுக்கப்பட்டு விட்டன. இனி, அது நம் நாட்டின் ஒரு பகுதி அல்ல. நம் நாடு, ஒன்றுபட்ட அகண்ட பாரதமாக இருந்தபோது, நம் சகோதர - சகோதரிகளாக, தாயாக இருந்தவர்கள் இன்றைக்கு அங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது தார்மீக மற்றும் அரசியலமைப்பு ரீதியாக நம் பொறுப்பு என நம்புகிறேன்.
அதேபோல, ஷியா, பலோச், அஹமதியா பிரிவினரும் உலகம் முழுதும் முஸ்லிமாக கருதப்படுகின்றனர். அதனால்தான் அவர்கள் இதில் இடம்பெறவில்லை. மேலும், இந்திய குடியுரிமை கேட்டு உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை கருத்தில் வைத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்.
சி.ஏ.ஏ.,வை பொறுத்தவரை, தகுதி வாய்ந்த ஆவணங்களின்றி, எல்லை கடந்து வந்த சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம்.
முறையான ஆவணங்களின்றி எல்லை தாண்டி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் முறையான ஆவணங்களை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

