21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார்? இறுதி முடிவுக்கு காத்திருக்கும் தலைவர்கள்!
21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார்? இறுதி முடிவுக்கு காத்திருக்கும் தலைவர்கள்!
ADDED : மார் 12, 2024 03:36 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 21 தொகுதி வேட்பாளர்கள் யார் என்பது நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை.
கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், பெங்களூரு ரூரல், ஹாசன், துமகூரு, விஜயபுரா, மாண்டியா, ஹாவேரி, ஷிவமொகா ஆகிய ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர்.
மீதியுள்ள, 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்., அலுவலகத்தில், நேற்றிரவு 7:00 மணிக்கு, அக்கட்சியின் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, வேட்பாளர்கள் தேர்வு குழு தலைவர் ஹரிஷ் சவுத்ரி, குழு உறுப்பினர் விஸ்ஜித் கதம், தேசிய செயலர்கள் மயூரா ஜெயகுமார், அபிஷேக் தத், ரோஜி ஜான் ஆகியோர் பங்கேற்றனர்.
இரவு 9:00 மணியளவில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவரிடம், பெலகாவி, சிக்கோடி வேட்பாளர்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
பெங்., மத்திய தொகுதிக்கு, நடிகர் சாது கோகிலா சீட் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.
ஆனாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மீதியுள்ள 21 தொகுதிகளுக்கு, இரண்டு, மூன்று கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

