ADDED : பிப் 06, 2024 11:03 PM
பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது போல, கர்நாடகா அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாற கூடியவர்கள். யார் எந்த நேரத்தில் எந்த கட்சிக்கு செல்வார் என்றே கணிக்க முடியாது. கமுக்கமாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பா.ஜ., வென்றாலும், ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனாலும் ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர்.
பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்தன. குமாரசாமி முதல்வர் ஆனார். ஆனால் 14 மாதங்களில் பதவியை இழந்தார். இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வுக்கு ஓடியது தான்.
இடைத்தேர்தலில் ஐந்து பேர் தோற்றனர். மற்ற 12 பேர் வெற்றி பெற்றனர். இதில் 11 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இந்நிலையில் 2023 சட்டசபை தேர்தலில் பெரும்பாலோனார் தோற்றனர்.
இப்போது அவர்களின் நிலை என்ன என்று பார்க்கலாம்.
பிரதாப் கவுடா பாட்டீல்: ராய்ச்சூரின் மஸ்கியை தொகுதியை சேர்ந்தவர். பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த 2019 ல் நடந்த இடைத்தேர்தல், கடந்த ஆண்டு நடந்த, சட்டசபை தேர்தலில் தோற்றார். தற்போது பா.ஜ.,வில் எந்த பொறுப்பிலும் இல்லை. பயனற்ற தலைவர் என்று, ராய்ச்சூர் மாவட்ட பா.ஜ., தலைவர்கள் முத்திரை குத்தி உள்ளனர்.
மகேஷ் குமட்டள்ளி: ராஜினாமாவுக்கு பின், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் தோற்றார். ரமேஷ் ஜார்கிஹோளியின் ஆதரவாளர் என்பதால், பா.ஜ.,வில் ஓரளவுக்கு மரியாதை உள்ளது.
பி.சி.பாட்டீல்: சட்டசபை தேர்தலில் தோற்றார். லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதி 'சீட்' பெற அடி போடுகிறார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, மகன் காந்தேஷுக்கு 'சீட்' வாங்கி கொடுக்க நினைக்கிறார். காங்கிரசில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவருக்கு, 'சீட்' தராகூடாது என்று, ஈஸ்வரப்பா கறாராக கூறி வருகிறாராம்.
ரமேஷ் ஜார்கிஹோளி: கூட்டணி அரசு கவிழ காரணகர்த்தாவே இவர் தான். கடந்த 2019 ல் நடந்த இடைத்தேர்தலில் வென்று, நீர்பாசனத்துறை அமைச்சர் ஆனார். இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால், அமைச்சர் பதவி இழந்தார். கடந்த ஆண்டு நடந்த, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும் முன்பு இருந்த போல, தற்போது பா.ஜ.,வில் செல்வாக்கு இல்லை. பெயருக்கு ஒரு தலைவராக இருக்கிறார்.
முனிரத்னா: பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,. துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி எம்.பி., சுரேஷுன் எதிராளியாக உருவெடுத்து உள்ளார். பா.ஜ.,வில் நீடிப்பதால் எதிர்காலம் உள்ளது.
கோபாலய்யா: பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட் தொகுதி எம்.எல்.ஏ., தொகுதியில் அசைக்க முடியாத, தலைவராக வலம் வருகிறார். இவரும் பா.ஜ.வில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
பைரதி பசவராஜ்: பெங்களூரு கே.ஆர்.புரம் எம்.எல்.ஏ., ஒரு காலத்தில் முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். பா.ஜ., உள்ளுர் தலைவர்கள் தொல்லையால், மீண்டும் காங்கிரஸுக்கு வர முயற்சி செய்தார். ஆனால் சித்தராமையாவின் எதிர்ப்பால், பா.ஜ.,வில் நீடிக்கிறார்.
ஸ்ரீமந்த் பாட்டீல்: காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெறுவதாக கூறிவிட்டு, காங்கிரசில் இருந்து ஓடியவர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், சட்டசபை தேர்தலில் தோற்றார். பா.ஜ.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ளார்.
சிவராம் ஹெப்பார்: எல்லாபுரா தொகுதி எம்.எல்.ஏ., உள்ளூர் பா.ஜ., தலைவர்கள் தொல்லையால், மீண்டும் காங்கிரஸ் வர நினைக்கிறார். ஆனால் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார்.
சோமசேகர்: பெங்களூரு யஷ்வந்த்பூர் எம்.எல்.ஏ.,. தற்போது பா.ஜ., தலைவர்கள் மீது, அதிருப்தியில் உள்ளார். காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். நேரம் பார்த்து அக்கட்சிக்கு செல்ல தயாராக இருக்கிறார்.
சுதாகர்: சிக்கபல்லாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜ., ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்தார். கட்சியில் நல்ல மதிப்பு உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதிக்கு அடிபோடுகிறார்.
நாகராஜ்: பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் தொகுதிகாரர். கடந்த 2019 இடைத்தேர்தல், சட்டசபை தேர்தலில் தோற்றார். ஆனாலும் பணக்காரர் என்பதால், எம்.எல்.சி., பதவி கொடுத்து, கட்சியில் தக்க வைத்து உள்ளனர்.
நாராயண கவுடா: மாண்டியாவில் முதல்முறை பா.ஜ., வெற்றி பெற காரணமாக இருந்தவர். சட்டசபை தேர்தலில் தோற்ற பின்னர், தொகுதி பக்கம் ஆளையே காணவில்லை. மும்பையில் குடும்பத்துடன் வசிக்கிறார். அத்தி பூ பூப்பது போல, அவ்வப்போது தொகுதி பக்கம் தலை காட்டுகிறார்.
ஆனந்த்சிங்: சட்டசபை தேர்தலில் தனக்கு பதிலாக, மகன் சித்தார்த்தை சிங்கை களம் இறக்கினார். ஆனால் அவர் தோற்று விட்டார். இதனால் வீட்டில் முடங்கி போய் இருந்த ஆனந்த்சிங், கொப்பால் தொகுதி லோக்சபா தொகுதி 'சீட்' கேட்டு வருகிறார்.
சங்கர்: ராணிபென்னுார் தொகுதியில் இருந்து 2018 தேர்தலில், சுயேச்சையாக வென்றார். காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்தார். பின்னர் பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் அவருக்கு 'சீட்' கிடைக்கவில்லை. எம்.எல்.சி., பதவி கொடுத்து அமைச்சர் ஆக்கினர். ஆனால் சில மாதங்களில் பதவியை பறித்தனர். இதனால் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார். கடந்த தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றார்.
விஸ்வநாத்: இடைத்தேர்தலில் ஹுன்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தற்போது எம்.எல்.சி., ஆக உள்ளார். ஆனாலும் பா.ஜ.,வுக்கு எதிராக பேசி வருகிறார். விரைவில் காங்கிரசில் இணைய உள்ளார்.
ரோஷன் பெய்க்: காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. தற்போது எந்த கட்சியிலும் அவர் இல்லை.
- நமது நிருபர் -

