தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு தெரிவித்தோம்: அமைச்சர் ஜெய்சங்கர்
தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு தெரிவித்தோம்: அமைச்சர் ஜெய்சங்கர்
ADDED : மே 27, 2025 07:00 AM

புதுடில்லி : பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே, அந்த நாட்டுக்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்ததாக, காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை தொடர்பாக, பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. நம் படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக, பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அமைப்பு செய்தி வெளியிட்டது. அதன்பிறகே, பாகிஸ்தானுக்கு தெரிவித்தோம்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் நேர்மையற்ற முறையில் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது.
ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக பாகிஸ்தான் பரப்பிய பொய் தகவல்களை முறியடித்துள்ளோம். ஆனால், பொய் தகவல்களை உண்மை என்று, இங்கு சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததுடன், அந்த நாட்டுக்கு பெரும் சேதத்தை நம் படைகள் ஏற்படுத்தின. அந்த நேரத்தில் நம்மிடம் பேசிய, அமெரிக்கா உட்பட பல நாட்டுத் தலைவர்களிடம் நம் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தோம்.
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவற்றின் முகாம்களை நாம் அழித்தோம். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தான் முதலில் தாக்குதலை நடத்தியது. அதனால், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும்படி பாகிஸ்தானிடம் இருந்து தான் கோரிக்கை வர வேண்டும். அவ்வாறு வந்தால், அதை பரிசீலிப்போம் என்று கூறினோம்.
அதன்படி, பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அழைப்பு வந்தது. அதை நாம் ஏற்றோம். இதில், அமெரிக்கா உட்பட எந்த நாட்டின் தலையீடும், உதவியும் இல்லை.
தன் முயற்சியால் தான் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினால், அது அவருடைய கருத்து. அதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.

