எங்களிடம் மந்திரக்கோல் இல்லை பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து
எங்களிடம் மந்திரக்கோல் இல்லை பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து
ADDED : ஏப் 09, 2025 11:07 PM
புதுடில்லி:மின்சார தாக்குதலில் இருந்து மயில்களைப் பாதுகாக்க, விதிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், சட்டம் இயற்றவோ, உருவாக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை' என கூறியுள்ளது.
புதுடில்லியச் சேர்ந்த 'சேவ் இந்தியா' அறக்கட்டளை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேசிய பறவையான மயில்கள் அடிக்கடி மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன. டில்லியின் பல இடங்களில் மின்சாரம் வழங்கும் மின் நிலையங்கள் தங்கள் மின் கம்பங்களைத் திறந்து வைத்திருக்கின்றன. மின் கம்பிகளில் அமரும் மயில்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன. டில்லி அரசின் வனத்துறை மற்றும் மின்சாரத் துறை செயலர்களிடம் கடந்த 3ம் தேதி மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மயில்களைப் பாதுகாக்க எந்த ஒழுங்குமுறை அல்லது வழிகாட்டுதல்கள் இல்லாத நிலையில், அரசு அதிகாரிகள் இரக்கமற்றவர்களாக இருக்கின்றனர்.
நீதிமன்றம் அதன் ரிட் அதிகார வரம்பைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக, அதிகாரிகளின் பொறுப்புகளை நிர்ணயிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அதிகாரிகளிடம் 3ம் தேதி மனு கொடுத்து விட்டு, 6ம் தேதி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து விட்டு, அவர்களின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல், அடுத்த நில நாட்களிலேயே எப்படி நீதிமன்றத்தை அணுக முடியும்? இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதுபோன்ற மனுக்களை நீதிமன்றம் ஊக்குவிப்பதில்லை. நீதிமன்றத்திடம் எந்த மந்திரக்கோலும் இல்லை. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு இயங்குகிறது. அதிகாரிகளிடம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
சட்டம் இயற்றவோ அல்லது விதிமுறைகளை வகுக்கவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. மயில்கள் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை எந்த சட்டமும் இல்லையென்றால், சட்டசபையில் முறையிட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

