ஜமீருக்கு வாக்காளர்கள் பதிலடி ம.ஜ.த., வேட்பாள் நிகில் ஆரூடம்
ஜமீருக்கு வாக்காளர்கள் பதிலடி ம.ஜ.த., வேட்பாள் நிகில் ஆரூடம்
ADDED : நவ 15, 2024 11:07 PM

ராம்நகர்: ''இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, என் தாத்தா, தந்தை பற்றி பேசிய அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுப்பர்,'' என, சென்னப்பட்டணா ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் நிகில் தெரிவித்தார்.
மூன்று சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் ஜமீர் அகமது கான், 'குமாரசாமியை கருப்பர்' என விமர்சித்தார்.
மத்திய அமைச்சரின் நிறத்தை கேலி செய்து பேசியதற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினேரே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ராம்நகரின் சென்னப்பட்டணாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் தலைவிதியை தொகுதி மக்கள் எழுதுவர். ஓட்டு எண்ணும் நாளில், மக்கள் என்ன தீர்ப்பு எழுதியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் அரசியல் சூழ்ச்சியால் தோல்வியடைந்தேன். இப்போது தேர்தலில் நிற்பதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் கடைசி நேர அரசியல் நடவடிக்கையால், போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொண்டர்களின் கவலையும், குழப்பமும் தீர வேண்டும். இந்த தேர்தல் ஒரு வகையில் எனக்கு அக்னி பரிட்சை தான்.
தேசிய அளவில் சென்னப்பட்டணா தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த இடைத்தேர்தல், மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இது நிகிலின் தேர்தலல்ல; கூட்டணி கட்சிக்கான தேர்தல்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, என்னை ஆசிர்வதித்து, வேட்பாளராக அறிவித்தார். 18 நாட்களும் இரு கட்சித் தொண்டர்களும் இரவு, பகலாக உழைத்தனர். இளைஞர்கள், முதியவர்கள் என் மீது அன்பை காட்டினர். அனைவருக்கும் நன்றி.
இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, என் தாத்தா, தந்தை பற்றி பேசிய அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

