வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம்; சுய தேவைக்கு பயன்படுத்திய நாகேந்திரா
வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம்; சுய தேவைக்கு பயன்படுத்திய நாகேந்திரா
ADDED : அக் 15, 2024 12:23 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணத்தை, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா தன் தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தியது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.
பரிமாற்றம்
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், நடப்பாண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்ட பின், அதில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
தற்கொலைக்கு முன், அவர் எழுதி வைத்த கடிதத்தில் ஆணையத்தின் பணத்தை சட்டவிரோதமாக, தனியார் கணக்குக்கு பரிமாற்றம் செய்ய, தனக்கு நெருக்கடி கொடுத்தாக விவரித்திருந்தார்.
இவ்விஷயத்தில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்தார்.
வால்மீகி ஆணையத்தில் நடந்த முறைகேடு குறித்து, எஸ்.ஐ.டி., விசாரித்தது. பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதால், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த துவங்கியது.
கடந்த ஆறு நாட்களுக்கு முன், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 15 கோடி ரூபாயை, பல்லாரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துக்காராம் வெற்றிக்காக பயன்படுத்தியதாக விவரிக்கப்பட்டிருந்தது.
நாகேந்திரா தன் தனிப்பட்ட தேவைக்கும், ஆணையத்தின் பணத்தை பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகேந்திராவுக்கு நெருக்கமான விஜயகுமாரின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டது.
இதில் அழிக்கப்பட்ட விபரங்கள் திரும்ப பெறப்பட்டது. ஆணையத்தின் பண விவகாரம் பற்றிய விபரங்கள் இருந்தன.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைபட்டுள்ள நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 187 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தியதின் முக்கிய சூத்திரதாரி. இந்த முறைகேட்டில், ஹைதராபாத்தின் பஸ்ட் கிரெடிட் கோ ஆப்பரேடிவ் வங்கி நிர்வாக இயக்குனர் சத்ய நாராயண், வங்கி தலைவர் இடகாரி சத்ய நாராயணா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா, செக்யூரிட்டி நாகராஜ் உட்பட 24 பேருக்கு தொடர்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிடைத்தது ஜாமின்
இந்நிலையில், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் தொடர்பு கொண்டு, சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நாகேந்திராவுக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. 2 லட்சம் ரூபாய் பாண்ட், இருவரின் உத்தரவாதத்தின் அடிப்படையில், ஜாமின் வழங்கியது.

