ADDED : பிப் 07, 2024 11:13 PM
விஜயநகரா: மத்திய அரசை கண்டித்து டில்லியில் காங்கிரசார் ஒற்றுமையை காண்பித்து, போராட்டம் நடத்தினர். ஆனால் மாநிலத்துக்குள் அமைச்சர் ஜமீர் அகமது கானை, மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கும்படி குரல் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, விஜயநகரா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிராஜ் ஷேக், நேற்று கூறியதாவது:
விஜயநகரா மாவட்டத்தில், மூன்று தனியார் நபர்கள், அரசு அலுவலகம் உட்பட, அனைத்து இடங்களிலும் தென்படுகின்றனர்.
அரசில் இருக்கிறோம் என, காண்பித்துக்கொண்டு சில அசம்பாவிதங்களுக்கு காரணமாகின்றனர்.
அந்த தனியார் நபர்கள் யார் என்பதை, மாவட்ட அதிகாரிகளும், பொறுப்பு அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் பொறுப்பு அமைச்சருடன்தான்,
அவர்கள் தென்படுகின்றனர். பசவனகவுடா கக்கரகவுளா யார்? அனைத்து அரசு அலுவலகத்திலும் இருக்கிறார். அமைச்சருடனேயே ஹெலிகாப்டரில் இறங்குகிறார்.
மூன்று நாட்களாக நடக்கும் ஹம்பி உற்சவத்தை, காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சிக்காக உழைத்தவர்களை விலக்கி வைத்து நடத்தினர். மாவட்ட பொறுப்பு அமைச்சர், எங்களை அவமதித்துள்ளார். ஜமீர் அகமது கான், பொறுப்பேற்ற பின் விஜயநகர மாவட்ட காங்கிரசில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோஷ்டி பூசல் உருவாகியுள்ளது. அவர் கட்சியை பலப்படுத்தவில்லை. தொண்டர்களை அடையாளம் காணவில்லை.
தொண்டர்களை விலக்கி வைத்துவிட்டு, தன் பணிகளை செய்கிறார். ஜமீர் அகமது கானால் எங்கள் மாவட்டத்துக்கு, நல்லது நடக்காது. எனவே அவரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

