ஜமீரை 'குள்ளன்' என்று அழைத்ததில்லை மத்திய அமைச்சர் குமாரசாமி திட்டவட்டம்
ஜமீரை 'குள்ளன்' என்று அழைத்ததில்லை மத்திய அமைச்சர் குமாரசாமி திட்டவட்டம்
ADDED : நவ 15, 2024 11:08 PM
மைசூரு: ''அரசியல் ரீதியாக மட்டுமே அமைச்சர் ஜமீர் அகமது கானுடன் எனக்கு நட்பு இருந்தது. அவரை ஒருபோதும் குள்ளன் என்று நான் அழைத்தது இல்லை,'' என, மத்திய தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா தேர்தல் பிரசாரத்தின்போது, அமைச்சர் ஜமீர் அகமது கான், என்னை பார்த்து 'கருப்பர்' என்று விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 'என்னை குள்ளன் என்று குமாரசாமி அழைப்பார். நான் கருப்பர் என்று அழைப்பேன். நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள்' என்று கூறியுள்ளார். ஆனால் அது பொய்.
எங்கள் இருவருக்கும் இருந்த நட்பு, அரசியல் ரீதியாக மட்டுமே. தனிப்பட்ட முறையில் அவருடன் எந்த நட்பும் எனக்கு இல்லை. அவரை குள்ளன் என்று ஒருபோதும் நான் அழைத்தது இல்லை.
கருப்பு, குட்டை என்று பேசும் கலாசாரத்தில் இருந்து நான் வரவில்லை. அவரது வார்த்தை காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தை காட்டுகிறது.
ஜமீர் என்னை பற்றி கூறிய வார்த்தையை முதல்வர் சித்தராமையா, முதல்வர் சிவகுமார் ஆதரித்தனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏதாவது பேசினால் அவர்கள் மீது உடனடியாக வழக்கு போடுகின்றனர். ஜமீர் விவகாரத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்?
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 50 பேரிடம் தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக முதல்வர் கூறியது பொய். அவர் கூறியது உண்மை என்றால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒப்படைக்கட்டும்.
சென்னப்பட்டணா தொகுதியில் மக்கள் எங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவர். நல்ல முறையில் வெற்றி பெறுவோம். அரசியல் ரீதியாக என்ன நடந்தது என்பதை யோகேஸ்வர் கணித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

