சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல்வர் ரெட்டி கண்டனம்
சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல்வர் ரெட்டி கண்டனம்
UPDATED : ஏப் 20, 2024 01:41 PM
ADDED : ஏப் 20, 2024 12:49 PM

ஹைதராபாத்: ‛‛ சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா மாநில முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‛மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்' என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் குவிந்தது. உதயநிதிக்கு எதிராக ஹிந்து முன்னணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி ஆங்கில டிவி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். அப்போது உதயநிதி பேச்சு குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் : ‛‛சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறானது. தெலுங்கானா முதல்வராகவும் மாநில காங்கிரஸ் தலைவராகவும், உதயநிதியின் பேச்சு தவறு என எனக்கூறுகிறேன். அதற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மத உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதுடன், இடையூறு செய்யாமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.
தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

