ADDED : செப் 17, 2025 03:12 AM

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின், 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் வழங்கி வருகிறது. இந்த கொலீஜியத்தின் கூட்டம், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக பணியாற்றும் ஜியா லால் பரத்வாஜ், ரொமேஷ் வர்மா ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும்; கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதித் துறை அதிகாரிகளான கீதா கடபா பாரதராஜ செட்டி, முரளிதர பாய் போர்கட்டே, தியாகராஜ நாராயண் இனாவல்லி ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்தை நிரந்தர நீதிபதியாகவும்; திரிபுரா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி பிஸ்வஜித் பாலித்தை நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதே போல், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -