ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சி: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சி: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : ஜன 27, 2024 11:14 AM

புதுடில்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., சதி செய்து வருகிறது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 9 ஆண்டாகவே ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்கு பா.ஜ., தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. பா.ஜ.,வின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., சதி செய்து வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில், போட்டியிட, 7 எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.25 கோடி வரை பா.ஜ., பேரம் பேசியுள்ளது. 21 எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கடவுளும் மக்களும் எப்போதும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாக உள்ளனர். ஆம் ஆத்மி அரசு எவ்வளவு நல்லது செய்துள்ளது என்பது டில்லி மக்களுக்கு தெரியும். டில்லி மக்கள் 'ஆம் ஆத்மியை' பெரிதும் நேசிக்கின்றனர். எனவே, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க நினைக்கும் பா.ஜ.,வின் முயற்சி வெற்றி பெறாது. பொய்யாக வழக்கு தொடர்ந்து, என்னை கைது செய்து அரசை கவிழ்க்க பா.ஜ.,வினர் நினைக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

