டில்லியில் கடும் பனியால் ரயில்கள், விமானங்கள் சேவை பாதிப்பு; பயணிகளுக்கு அறிவுறுத்தல்
டில்லியில் கடும் பனியால் ரயில்கள், விமானங்கள் சேவை பாதிப்பு; பயணிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : டிச 29, 2025 06:44 AM

புதுடில்லி: டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் ரயில்கள், விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக டில்லியில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால், சாலையில் செல்லும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தென்படவில்லை. வாகன போக்குவரத்து போல, ரயில்கள், விமானங்கள் சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
பனிமூட்டம் காரணமாக, டில்லி விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. டில்லியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
டில்லி ரயில் நிலையத்தில் ககன் என்ற பயணி கூறுகையில், 'நான் கான்பூருக்குச் செல்ல வேண்டும், ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் எட்டு மணி நேரம் தாமதமாகச் செல்கிறது, என்றார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கோவா விமான நிலையத்திலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானம் அதிகாலை 2:35 மணிக்கு டில்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பனிமூட்டம் காரணமாக இந்த விமானம் ஆமதாபாத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ''இன்று காலை டில்லி மற்றும் ஹிண்டன் விமான நிலையத்தில் கடும்பனி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான சேவைகள் நேரத்தில் வழக்கம் போல் அல்லாமல் மாற்றம் ஏற்படலாம். வானிலை சீரடைந்தவுடன், செயல்பாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.
மேலும் விமானங்கள் திட்டமிட்டபடி புறப்படும். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விழிப்புடன் இருக்க வேண்டும். எங்களது இணைய தளத்தில் பயணிகள் தங்கள் விமானங்களின் தற்போதையை நிலவரங்களை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையம் எச்சரிக்கை
அதேபோல் டில்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: அடர்ந்த பனிமூட்டத்தின் காரணமாக விமானச் செயல்பாடுகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் தாமதங்கள் மற்றும் ரத்துகள் ஏற்படக்கூடும்.
விமான நிலையத்தில் பயணிகளுக்கு எங்களது ஊழியர்கள் தீவிரமாக உதவி வருகின்றனர். இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

