ராபர்ட்சன்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் 'பார்க்கிங்' வசதி இல்லாததால் பெரும் பாதிப்பு
ராபர்ட்சன்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் 'பார்க்கிங்' வசதி இல்லாததால் பெரும் பாதிப்பு
ADDED : பிப் 20, 2024 06:47 AM

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாததால், அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில், ஸ்ரீமஹாவீர் ஜெயின் கல்லுாரி முதல் சுராஜ்மல் சதுக்கம் வரையிலும், காந்தி சதுக்கம் முதல் பிரிட்சர்ட் சாலை பெரிய மசூதி சதுக்கம் வரையிலும் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதே போல் ராபர்ட்சன் பேட்டை நகராட்சி பஸ் நிலையத்தில் நுாற்றுக்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் பயணியர் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
பிரிட்சர்ட் சாலையில் எம்.ஜி., மார்க்கெட் எதிரில் 100 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்த கூடாதென போலீசார் அறிவிப்பு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக, வாகனங்களை புல் மார்க்கெட்டில் இலவசமாக நிறுத்தலாம் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப் படுமென அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பு ஓரிரு நாளுடன் முடிந்து போனது. மீண்டும் வழக்கம் போல சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்கதையாகிறது.
ராபர்ட்சன்பேட்டை 1வது கிராஸ் பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் உள்ளது. நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. கடைகளின் முன் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதை நகராட்சி குறியிட்டனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இங்கு வாகனங்கள் இருபுறமும் எதிர் எதிரே வருவதால் நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறது. எனவே, 1வது கிராஸ் சாலையை ஒருவழி பாதை ஆக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

