சின்னசாமி மைதானத்தில் டிக்கெட் கட்டணம் உயர்வு; குறைந்தபட்சம் ரூ.2,300; அதிகபட்சம் ரூ.42,350
சின்னசாமி மைதானத்தில் டிக்கெட் கட்டணம் உயர்வு; குறைந்தபட்சம் ரூ.2,300; அதிகபட்சம் ரூ.42,350
ADDED : மார் 21, 2025 03:47 AM

நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளதால், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலுக்கு போட்டியாக, அனல் பறக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நாளை கோல்கட்டாவில் துவங்குகின்றன. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், ஆர்.சி.பி., அணி, ஏழு போட்டிகளில் விளையாடுகின்றன. இதற்கான டிக்கெட் கட்டணத்தை, கிரிக்கெட் மைதான நிர்வாகம் நிர்ணயித்து அறிவித்து உள்ளது.
பெங்களூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இம்மைதானத்துக்கு, நகரின் பல பகுதிகளிலும் இருந்தும் ரசிகர்கள் வருகை தருவர்.
இம்முறை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 2,300 ரூபாயும்; அதிகபட்சம் 42,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
ஏப்ரல் 2ம் தேதி குஜராத் டைடன்ஸ் உடன் ஆர்.சி.பி., விளையாடும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து விட்டன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த 17 ஆண்டுகளாக ஐ.பி.எல்.,லில் விளையாடி வருகிறது. மூன்று முறை இறுதி போட்டியில் விளையாடியும், கோப்பையை வெல்லவில்லை.
- நமது நிருபர் -

