'இது என்கவுன்டரே அல்ல' பத்லாபூர் வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
'இது என்கவுன்டரே அல்ல' பத்லாபூர் வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
ADDED : செப் 26, 2024 12:39 AM
மும்பை, மஹாராஷ்டிராவில் சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அக் ஷய் ஷிண்டே என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில், 'போலீசாரின் துப்பாக்கியை பறித்து அக் ஷய் ஷிண்டே சுட்டார் என்பதை நம்புவது கடினமாக உள்ளது. இது என்கவுன்டரே அல்ல' என தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
விசாரணை
மஹாராஷ்ரடிராவின் தானே மாவட்டத்தின் பத்லாபூர் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இரு சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய அக் ஷய் ஷிண்டே, 24, சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
கடந்த 23ம் தேதி, தலோஜா சிறையில் இருந்து பத்லாபூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், உதவி ஆய்வாளர் காயமடைந்தார். போலீசாரின் பதில் தாக்குதலில், அக் ஷய் ஷிண்டே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தன் மகன் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடும்படியும், உயிரிழந்த அக் ஷயின் தந்தை மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே, பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'சம்பவத்திற்கு ஒரு நாள் முன், தன் பெற்றோரை அக் ஷய் சந்தித்தார். அப்போது, போலீசார் கூறியதை செய்யும் மனநிலையில் தான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்த வழக்கில், யார் குற்றவாளி என்பதை காவல் துறை தீர்மானிக்கிறது. இது ஒரு மோசமான முன்னுதாரணம். சட்டத்தின் ஆட்சி மேலோங்க வேண்டும். அக் ஷய் ஷிண்டே மரணம் குறித்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும்' என்றார்.
மரணத்திற்கான காரணம் குறித்து, மாநில அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சந்தேகத்தை ஏற்படுத்தும்
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 'அக் ஷய் ஷிண்டேயின் இடது தொடையில் குண்டு பாய்ந்தது. அவர் பறித்த துப்பாக்கியை இரு வழிகளில் பயன்படுத்த முடியும். அவர் மேல் பகுதியில் உள்ள ஸ்லைடரை திறந்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்' என்றார்.
இதை கேட்ட பின், நீதிபதிகள் கூறுகையில், 'நீங்கள் கூறுவதை நம்புவது கடினமாக உள்ளது. துப்பாக்கியின் ஸ்லைடரை திறக்க பலம் தேவை. அவ்வளவு எளிதில் அதை திறக்க முடியாது.
சாதாரண மனிதனால் துப்பாக்கியால் சுட முடியாது. பயிற்சி பெற்ற ஒருவராலேயே துப்பாக்கியை கையாள முடியும். 'அக் ஷய் மூன்று முறை சுட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதில் ஒரு குண்டு போலீஸ்காரரை தாக்கியது என்றால், மற்ற குண்டுகள் என்ன ஆனது? நீங்கள் அவரை எளிதாக வீழ்த்தியிருக்கலாம். அவரை பார்க்க பலசாலி போல் தெரியவில்லை.
'இதை என்கவுன்டர் எனக் கூற முடியாது. இது என்கவுன்டர் அல்ல. இந்த விவகாரத்தில் விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏதாவது நடந்தால், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்' என்றனர்.
தொடர்ந்து, 'இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இதுவரை மாநில குற்ற புலனாய்வுப் பிரிவினரிடம் ஏன் ஒப்படைக்கப்படவில்லை?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'எந்தவொரு விசாரணையிலும் நேரம் முக்கியமானது.
'தாமதம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும். என்கவுன்டர் நடந்த போலீஸ் வாகனத்தில் இருந்த ஐந்து போலீசாரின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை சேகரிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

