சீனாவுக்கு தான் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு: ஜெய்சங்கர்
சீனாவுக்கு தான் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு: ஜெய்சங்கர்
ADDED : ஏப் 03, 2024 04:53 PM

ஆமதாபாத்: ஐ.நா., பாதுகாப்புச் சபையில், இந்தியாவுக்கு முன்னர் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாட்டின் முதல் பிரதமர் நேரு பேசிய காலம் உண்டு என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆமதாபாத்தில் குஜராத் மாநில வர்த்தகர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது ஜெய்சங்கர் கூறுகையில், 1950 களில் முதல் பிரதமர் நேருவுக்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடந்தது.
அப்போது, நேருவிடம் சீனா குறித்து படேல் எச்சரிக்கை செய்தார். வரலாற்றில் இல்லாத வகையில் எல்லையில் சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்கிறது என படேல் எச்சரித்தார். சீனாவின் கருத்துகள் மற்றும் நோக்கம் ஏதும் நன்றாக தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். அது குறித்து கொள்கை வகுப்பது முக்கியம் என வலியுறுத்தினார். இதனை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை
நேரு,‛‛ நீங்கள் தேவையில்லாமல் சீனாவை சந்தேகப்படுகிறீர்கள். இமயமலையைத் தாண்டி வந்து யாரும் நம்மை தாக்க மாட்டார்கள்'' என படேலிடம் தெரிவித்தார்.
இது நடந்த சில வருடங்களுக்கு பிறகு ஐ.நா., சபை குறித்தும், அதில் இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் விவாதம் வந்தது. அப்போதும் நேருவின் நிலைப்பாடானது, ஐ.நா.,வில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது. அதற்கு முன்னர் சீனாவுக்கு இடம் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. இதனால் தான் இந்தியாவே முதன்மை என நாம் நினைக்கிறோம். ஆனால், சீனாவே முதன்மை என நினைத்த ஒரு காலமும் இருந்தது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் காலம் காலமாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளது. இன்று நமது எல்லைகளைப் பற்றி பேசும்போது, சிலர் நமது எல்லைகளை பழைய நிலைக்கு மாற்றுங்கள் என்கிறார்கள். நமது எல்லைகள் இன்னமும் நம எல்லைகள் தான். அதை சந்தேகப்படக்கூடாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

